தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.9.5 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: குருவிகள் உள்பட 3 பேர் கைது
சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்த வடமாநில பயணியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை அலுவலகத்திற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது சாக்லேட் வடிவில் பதப்படுத்தப்பட்ட 7.5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பாக்கெட்கள் சிக்கியன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி. இதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், உடைமைகளில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், இருவரும் கடத்தல் குருவிகள் என்பதும், தாங்கள் கடத்தி வந்த கஞ்சாவை வாங்க விமான நிலையத்தில் ஒருவர் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த வடமாநில நபரை கைது செய்தனர். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.9.5 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா சிக்கிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.