சென்னை: தமிழ்நாட்டில் 20 உயர்நிலைப் பள்ளிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 200 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, கடலூர் (பண்ருட்டி), கள்ளக்குறிச்சி (ரிஷிவந்தியம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்கல்பட்டு (பேரனூர் கிராமம்), திண்டுக்கல் (வளவிசெட்டிபட்டி), மதுரை (செட்டிகுளம்), திருச்சி (கள்ளக்காம்பட்டி), திருப்பத்தூர் (திம்மாம்பேட்டை), சென்னை (மாத்தூர்), விழுப்புரம் (கஞ்சனூர்), திருச்சி (கலைஞர் கருணாநிதி நகர்), விழுப்புரம் (மேல்கரணை), ராமநாதபுரம் (வாலிநோக்கம்), திருப்பூர் (முதலிபாளையம்), கிருஷ்ணகிரி (பாத்தகோட்டா), சேலம் (லக்கம்பட்டி), திருவண்ணாமலை (வேளானந்தல்), நாகப்பட்டினம் (கணபதிபுரம்), ராமநாதபுரம் (புதுமடம்), கன்னியாகுமரி (வாரியூர்) ஆகிய 20 இடங்களில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளிகள் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் என தலா 10 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 200 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நிகராக காலியாக உள்ள 470 பணியாளர் பணியிடங்கள் அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்படுகின்றன. அதேபோல், அந்த பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.