உயர்கல்வித்துறை, தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம் இன்று தொடக்கம்: அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபையும் தமிழ்ப் பெருமிதங்களையும் உணர்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளான 2023ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கப்பட்டு 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டன.
மாபெரும் தமிழ்க்கனவுத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம், மருத்துவம் என அனைத்து வகையான கல்லூரிகளிலும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 200 கல்லூரிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் நிகழ்விடக் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் வலையொளி வழியே நேரலையில் ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சென்றடைய முடியும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் 50க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை அடுத்த நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவுகள் குறித்த விவரங்கள் உயர்கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படும். இந்நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில், மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி, ‘நான் முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு சிற்றேடுகள் வழங்கப்படுகின்றன.
‘தமிழ்ப்பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பாராட்டியும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பாராட்டியும் சான்றிதழ்களும் பரிசுப் புத்தகங்களும் வழங்கப்படும். நடப்புக் கல்வியாண்டின் முதல் நிகழ்வுகள் இன்று மற்றும் நாளை கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
தொன்மை மறவேல், செம்மொழியான தமிழ் மொழி, பழந்தமிழரின் சூழலியல் அறிவு, தமிழர் வளம் காப்போம், மானுடம் போற்றுவோம், பாட்டும் தொகையும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், மெய்ப்பொருள் காண்பதறிவு, வரலாற்று நாயகர்களாய் வாழ்ந்த மாபெரும் தலைவர்கள், வாழ்வாங்கு வாழ்வோம், தமிழ்நாடு கண்ட புதுமைப்பெண்கள், சமூகம் பழகு ஆகிய தலைப்புகளில் ஆளுமைகள் சொற்பொழிவாற்ற உள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ‘தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு, சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்களுடன் இன்று முதல் மாபெரும் தமிழ்க் கனவின் 3ம் கட்டம் தொடங்குகிறது. அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம், தமிழால் இணைவோம், தமிழராய் உயர்வோம் என கூறியுள்ளார்.