திருச்சி: திருச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று அளித்த பேட்டி: அதிகளவில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறுவது அர்த்தமில்லாத வார்த்தை. 540 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு 2,700க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள், 2,700க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
எனவே காலி பணியிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பல்கலைகழகத்தால் ஏற்கப்பட்ட சம்பள விகிதாசாரத்தை தவிர, நிதி ஆதாரம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு சில உறுப்பு கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசு நிச்சயம் ஊதியத்தை வழங்கும். உயர்கல்வி துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அரசு கொண்டு வரும் திட்டத்துக்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும். மாறாக முட்டுக்கட்டை போடுவது நடந்து கொண்டிருக்கிறது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க ஆளுநர் அனுமதி மறுக்கிறார். அரசு திட்டங்கள் அனைத்துக்கும் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது.
துணைவேந்தர் நியமனத்தை முதல்வரே மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதற்கும் எதிராக தற்போது ஆளுநர் செயல்படுகிறார். சட்டத்தை நிலைநாட்ட கூட நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. எனவே உயர்கல்விக்கு தடையாக ஆளுநர் நின்றாலும், அந்த தடையை தகர்த்து உயர்கல்வித்துறை சிறந்து விளங்கும்.