போக்சோ வழக்கிலிருந்து தப்ப மீண்டும் முயற்சி விசாரணையை எதிர்கொள்ள எடியூரப்பாவுக்கு ஐகோர்ட் உத்தரவு: புதிய மனு தாக்கலுக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு
பெங்களூரு: பாஜ மூத்த தலைவரான கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் கடந்த 2024, மார்ச் 14 அன்று புகார் அளித்தார். இதன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் தாய், புற்றுநோய் காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், விசாரணை நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனுக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி எடியூரப்பா மீண்டும் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட அதே காரணங்களை வைத்து மீண்டும் ஏன் புதிய மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.