உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் தமிழக டிஜிபியை நியமிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபியாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ளக் கோரி அளித்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31ல்தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும், புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். தற்போது இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.