மதுரை: ஐகோர்ட் மதுரை கிளைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அரை நாள் விசாரணை பாதித்தது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை அருகே ஐகோர்ட் மதுரை கிளை அமைந்துள்ளது. ஐகோர்ட் கிளை பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக இதுகுறித்து ஐகோர்ட் கிளை காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு தடுப்பு பிரிவிற்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஐகோர்ட் நுழைவாயிலின் மெயின் கேட்டை இழுத்து பூட்டினர். இதையடுத்து நீதிமன்றத்துக்கு வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மற்றும் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பகல் 12 மணி வரை சோதனை நீடித்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. இதுகுறித்து விபரம் நிர்வாக நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைவரையும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். பகல் ஒரு மணி முதல் வழக்கமான விசாரணை தொடர்ந்தது. ஐகோர்ட் மதுரை கிளை துவங்கியது முதல் தற்போது வரை வேலை நாட்களில் பகலில் மெயின் கேட் பூட்டப்பட்டது நேற்று தான் முதல் முறை. மெயின் கேட் பூட்டப்பட்டதால், வழக்கமான பணிக்கு வந்த வழக்கறிஞர்கள், எழுத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வெளியிலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால், ஐகோர்ட் கிளை வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது. இந்த வெடிகுண்டு புரளியால் நேற்று அரை நாள் நீதிமன்ற விசாரணை பாதித்தது.