ரயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும் அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற வாலிபரும் காதலித்த நிலையில் அதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பெண் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை தாம்பரத்திலிருந்து கடற்கரை சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சிக்குள்ளான இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சதீசை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி சதீசுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக தீர்ப்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதே நேரம் சதீஷ் தரப்பில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அனைத்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும் முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே, தூக்கு தண்டனையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். சதீஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


