புதுடெல்லி: தெலங்கானாவை சேர்ந்த ஒருவர் தன்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இது நீதிமன்றத்தை கேலி செய்வதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்தார். ஜி.வி.சர்வண் குமார் என்பவர் தன்னை தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை பார்த்து எரிச்சலடைந்த தலைமை நீதிபதி கவாய், உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் தொடர்பான மனுக்களை நாங்கள் எப்போது விவாதித்தோம். இந்த விவகாரம் நீதித்துறை செயல்முறையை கேலி செய்வது ஆகும். இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட கொலீஜியத்தை கூட்ட உத்தரவிடட்டுமா? உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய விண்ணப்பம் செய்வதை எங்கே கேள்விப்பட்டீர்கள்? இது போன்ற ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தின் முன் கொண்டு வந்திருக்கக்கவே கூடாது என்று மனுதாரரின் வழக்கறிஞரை தலைமை நீதிபதி எச்சரித்தார். பின்னர் வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்து மனுவை வாபஸ் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
 
 
   