ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக்கும் கொள்கை முடிவில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்த உயர் நீதிமன்றம் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஏழு பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவது என்று கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஆவடியில் உள்ள அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம், தொழில் தகராறு சட்டப்படி பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை 2021 ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
இதுசம்பந்தமாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து ஆவடியில் உள்ள அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எஸ்.என் பதக், பொதுச்செயலாளர் சி.குமார் மற்றும் ஜெ.வில்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே, அரசின் இந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 2024ல் உத்தரவிட்டது. கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 100 சவீதம் அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை பொதுத்துறையாக மாற்றுவது குறித்து ஒன்றிய கேபினட் குழுவால் கடந்த 2020 ஜூலையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு பாதுகாப்பு துறையின் ஒப்புதல் பெறப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர் கூட்டமைப்புக்கும் அரசு தரப்புக்கும் பேச்சுவார்த்தை பல கட்டமாக நடந்த நிலையில் முடிவு எட்டப்படவில்லை. 4 சங்கங்களில் 3 சங்கங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. அதனால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தொழிற்சாலை குறித்து நிர்வாக ரீதியாக முடிவெடுக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் கொள்கை முடிவுதான் எடுக்க முடியும்.
அதன் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு, முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதாரண கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான எதிர்ப்புகளை ஏற்க முடியாது. ஒரு வேளை போர் அறிவிக்கப்பட்டு, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் இருப்பில் இருந்த ஆயுதங்கள், வெடி மருந்துகள் இருப்பு தீர்ந்துவிடும் நிலையில் அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த நேரத்தில் ஒவ்வொருவரின் கவனமும் பாதுகாப்பை நோக்கியே இருக்கும். அந்த நேரத்தில் தளவாட தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அப்போது அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவேதான், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான ஆயுதங்களையும், ஏற்றுமதி செய்வதற்கான ஆயுதங்களையும் தயாரிக்க ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள் சுமூகமாக செயல்படுவரை உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகே அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
