Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிக மக்கள்தொகை கொண்ட சென்னையில் காய்கறி வரத்து அதிகரிக்கும் நோக்கில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை: வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து நேற்று சென்னை, சேப்பாக்கம் தோட்டக்கலைத் துறை இயக்குநரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

இடம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ள வேண்டும், அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு அனைத்து அலுவலர்களும் செயல்படவேண்டும். மேலும், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், கீரைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து தோட்டக்கலைப் பண்ணைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரக பழச் செடிகளை நடவு செய்யவும் வலியுறுத்தினார்.

மேலும், நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் அனைத்து தோட்டக்கலைத் திட்டங்களுக்கான பழச்செடிகளையும் உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும், அனைத்துத் திட்டங்களையும் விரைந்து முடித்திட வேண்டும். அதனைத் தொடர்ந்து, பூங்காக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.

பருவமழை காலங்களிலும், பருவமற்ற காலங்களிலும் பெய்யும் மழை பொழிவினால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விவசாயிகளை நேரில் சந்தித்து உரிய ஆலோசனை வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் சாதனை விவரங்கள் குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கி வரும் மகத்துவ மையங்களின் தற்போதைய செயல்பாடுகளையும் தோட்டக்கலை பயிற்சி மையங்களின் பயிற்சி குறித்து கேட்டறிந்தார். புதிய தொழில் நுட்பங்களை அனைத்து மகத்துவ மையங்களிலும் செயல் விளக்கம் செய்யவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், வேளாண்மை இயக்குநர், முருகேஷ், மற்றும் தோட்டக்கலைத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.