தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட மேம்பால பணி திட்டமிட்ட காலத்தில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிக்கு உருவாக்கப்பட்டு வரும் பிரத்யேக எக்கு உற்பத்தி கட்டமைப்பு பணிகளை குஜராத் வதோதராவிற்கு நேரில் சென்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி முடிந்தவுடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும். தரச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் செய்யப்படமாட்டாது.
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணா சாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் பெரிதும் குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும். இந்த மேம்பாலம் சர்வதேச தரத்திற்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப்பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் சரவணசெல்வம் மற்றும் தொழிற்சாலையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.