ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 56ஆக குறைவு; நல்ல நீதி, நிர்வாகத்திற்காகவும் இடமாற்றம் நடைபெறும்: ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ள நீதிபதி பேச்சு
சென்னை: ஊழல், வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் தான், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக எண்ணக் கூடாது. நல்ல நீதி, நிர்வாகத்திற்காக இடமாற்றம் செய்யப்படுவதும் உண்டு என்று ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசும்போது, கடந்த 15 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த ஏழு மாதங்களில் 12 நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்போது, இரண்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் எண்ணிக்கை 56ஆக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் ஏற்புரை ஆற்றிய நீதிபதி விவேக் குமார் சிங், இந்த இடமாற்றத்தில் தனக்கு மகிழ்ச்சி இல்லை. எதற்காக தன்னை அலகாபாத்தில் இருந்து சென்னைக்கு இடம் மாற்றம் செய்தார்கள் என்பதும் தெரியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நல்ல நினைவுகளுடன் மத்திய பிரதேசம் செல்கிறேன் என்றார். நீதிபதி பட்டு தேவானந்த் பேசும்போது, ஊழல், வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் தான், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக எண்ணக் கூடாது. ஆனால் நல்ல நீதி, நிர்வாகத்திற்காக இடமாற்றம் செய்யப்படுவதும் உண்டு. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் பலர் பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அச்சமும் ஒருதலைப்பட்சமும் இல்லாமல் பணியாற்றினேன். மீண்டும் சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்திருப்பதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வகிறேன் என்றார். நீதிபதிகளின் இடமாற்றம் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 56ஆக குறைந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.