திருச்சி: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். 108 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், எஞ்சியிருந்த 2 பேரும் நேற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி எம்.ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுக்களின் மீது தீர்ப்பளித்த நீதிபதி அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். அதில், ‘‘மனுதாரர்கள் இருவரும் வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளியான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். 41 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஐசியூவில் உள்ளனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது’’ எனக் கூறி தள்ளுபடி செய்தார். ஐகோர்ட் கிளையில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியான நிலையில், இவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இருவரும் எந்நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிப்படை போலீசார், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை தீவிரமாக ேதடுகின்றனர். முக்கியமாக, புஸ்ஸி ஆனந்த் ராமேஸ்வரம் பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு, அவர் ராமேஸ்வரம் சென்றுள்ளாராம். தொடர்ந்து, படகு மூலம் ெசல்போன் சிக்னல் கிடைக்காத பகுதிக்கு அவரை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளார்களாம். கடலில் படகில் பதுங்கியுள்ள தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் ரோந்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாளை மறுதினம் (திங்கட் கிழமை) முன்ஜாமீன் கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், 2 நாட்களும் போலீசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக கடலில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றும், நாளையும் விடுமுறை என்பதால், 2 நாட்களும் போலீசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக கடலில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.