Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதும்பு மீன்!

விலை மலிவு...சுவையோ நிறைவு...

உலகம் முழுவதும் அனைவராலும் பரவலாக உண்ணக்கூடிய உணவு என்றால் அது கடல் உணவுதான். பலவகையான மீன்கள், இறால்கள், கணவாய், நண்டு என கடல் உணவுகளைப் பற்றி பெரிதாகவே பட்டியலிடலாம். இன்னும் கூடுதலாக சொல்லவேண்டுமென்றால் சிங்கி இறால் அதாவது லாப்ஸ்டர் உலகம் முழுவதும் சாப்பிடக்கூடிய அதிக விலையில் விற்கக்கூடிய ஒருவகை கடல் உணவு. அதைத் தொடர்ந்து சிப்பிக்கறி, சங்குக்கறி என நாம் சுவைத்துப்பார்க்காத உணவுகளும் கூட கடலில் இருந்து கிடைக்கின்றன.

உலகம் முழுவதும் சாப்பிடக்கூடிய அதே சமயம் அதிகளவு ஏற்றுமதி செய்யக்கூடிய கடல் உணவுகளும் இருக்கின்றன. ஆனால், கடலோர மக்கள் எந்த மாதிரியான மீன்களை சுவையான மீன்கள் எனச் சொல்கிறார்கள் தெரியுமா? அளவில் சிறிதாக விலையும் மலிவாக இருக்கிற மீன்களே சுவை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதாவது பெரிதாக ஏற்றுமதி செய்யப்படாத, பலருக்குத் தெரியாத மீன்கள் இருக்கின்றன. அந்த மாதிரியான மீன்களைக் கடலோர மக்களைத் தவிர பெரும்பான்மையானவர்கள் சாப்பிட்டிருக்க முடியாது.

அப்படி, பலர் சுவைத்தே பார்க்காத, சுவையான மீன்களில் ஒன்றுதான் சுதும்பு மீன். இந்த மீனை நீர் சுதும்பு, சள்ளை மீன் அல்லது குதிப்பு மீன் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். கடலுக்கு செல்பவர்களின் வலையில் இந்த மீன் மாட்டினாலும், விற்பனைக்கு வராதாம். தங்களின் தேவைக்கு விரும்பி எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதிகளவில் கிடைத்தால் மட்டுமே இந்த மீனை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்புவார்கள். இந்த மீனுக்கு இருக்கிற கிராக்கிக்கு, இதன் அட்டகாச சுவையே காரணம். அளவில் சிறிதாக, விலையும் மலிவாக கிடைக்கும் இந்த மீன் ஒரு வகை சீசன் மீன்.

சில நாட்களில் அதிகமாக கிடைக்கும். சில நாட்களில் கண்களால் பார்க்கக் கூட முடியாது என்கிறார்கள் மீனவர்கள். கடலின் மேற்பகுதியிலும் அதேசமயம் 400 அடிக்கு கீழும் வாழுகிற இந்த மீன் காரல் மீன் வகையைச் சேர்ந்தது. இந்த மீனானது இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தென்கிழக்காசியா வரையிலும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஜப்பானில் இருந்து குயின்சுலாந்து, ஆஸ்திரேலியா வரையிலுமே காணப்படுகிறது. குழம்பு, பொரியல், ரசம் என இந்த மீனைக்கொண்டு எல்லா வகையான வெரைட்டியும் செய்யலாம்.