சென்னை: பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா அன்புமணி, தனது ‘மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கல்வி, மருத்துவம், விவசாயம் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. கடனை அரசாங்கம் கொடுக்கக் கூடாது, மருத்துவ செலவைக் கொடுக்கக் கூடாது, பள்ளிப்படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை இலவசம், எந்த மருத்துவம் பார்த்தாலும் இலவசம். இதைத்தான் பாமகவின் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறோம்.இவை அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துவிட்டால் உங்களுக்குக் கடன் சுமை இருக்காது.
காஞ்சிபுரத்தில் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற இடங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கின்றன. அங்கு உள்ளூர் மக்கள் வேலை செய்வதில்லை. வெளியூரில் இருப்பவர்கள்தான் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தது காஞ்சிபுரம் மாவட்ட மக்கள். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனத் தெரிவித்துதான் வந்தார்கள்.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தால் பெண்கள் அதிகளவில் வேலை செய்வார்கள். ஹீரோக்களை திரையில் தேடாதீர்கள், இங்கிருப்பவர்கள்தான் உங்களுக்காக ஓடி வந்து உதவி செய்வார்கள். உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்னை, காவல் நிலையத்தில் பிரச்னை என்றால், இந்த மேடையில் இருக்கும் நிர்வாகிகள்தான் ஓடி வந்து உங்கள் பிரச்னையை தீர்த்து வைப்பார்கள். இவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள். இவர்களைத்தான் நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


