தலைவன் ஒரு படையை வழி நடத்தினால் அது படையாக இருக்கும் 41 பேர் பலியை உணராமல் சினிமா வசனம் பேசும் விஜய்: சீமான் கடும் தாக்கு
விருதுநகர்: விருதுநகரில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ேநற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், அளித்த பேட்டி: பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அரசியல் மக்களுக்கான சேவையாக இருந்தது. அன்று கொள்கை முதன்மையாக இருந்தது, இன்று கூட்டம் முதன்மையாகியிருக்கிறது. திரையில் தோன்றி நடித்து புகழ் வந்துவிட்டால், நாட்டை ஆள தகுதி வந்து விட்டதாக நினைக்கும் ஒரு தலைமுறை உருவாகி விட்டது. கரூரில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 41 பேர் இறந்துள்ளனர்.
ஒரு தலைவன் ஒரு படையை வழி நடத்தினால் அது படையாக இருக்கும். தலைவனை ஒரு படை வழி நடத்தினால் அது பாடையாக தான் இருக்கும். கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியிருக்கிறார். விஜய் காணொலியை பார்க்கும்போது அவருக்கு இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்பட கதாநாயகன் வசனம் போல் பேசியிருக்கிறார். இது நல்ல அணுகுமுறையில்லை. ஆள் புகுந்து கத்தியால் குத்தினார்கள் என தெரிவித்தனர். மருத்துவமனையில் நான் பார்த்தபோது ஒருத்தருக்கு கூட கத்தியால் குத்திய காயமில்லையே? மிதித்த காயங்கள் மட்டுமே இருந்தது. இவ்வாறு தெரிவித்தார்.
* விஜய்க்கு ஆதரவாக பாஜ நிற்பது தெரிகிறது
சீமான் கூறுகையில், ‘‘கரூர் சம்பவத்தில். ஒன்றிய அரசு சார்பில் இருந்து வந்தவர்கள் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை. கரூர் சம்பவத்திற்கு உடனடியாக பாஜ உண்மை கண்டறியும் குழுவை அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஏன் பாஜ உண்மை கண்டறியும் குழுவை அனுப்பவில்லை. கொடநாட்டில் 5 பேர் செத்தனர். ஆந்திரா காட்டிற்குள் கடந்த முறை சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 20 பேர் செத்தனர். உண்மை கண்டறியும் குழு வரவில்லை. மத்தியில் இருந்து வந்த குழு ஆறுதல் தெரிவிக்கவில்லை. காசை வாக்கரிசியாக லட்சத்தில் போட்டுள்ளனர். தேர்தல் இன்னும் 4 மாதத்தில் வருவதால் தான் உண்மை கண்டறியும் குழு எல்லாம் வருகிறது. இதுவே ஓராண்டாக இருந்தால் எவன் செத்தால் எனக்கென்ன என இருப்பார்கள்’’ என்றார்.