திருவொற்றியூர்: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து மாட்டு மந்தை மேம்பாலத்தை கடந்து பேசின் சாலை வழியாக மணலி, மாதவரம், கொருக்குப்பேட்டை மற்றும் மணலி புதுநகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மாட்டு மந்தை மேம்பாலம் அருகே, சரக்கு ரயில் செல்லும் வழித்தடத்தில், ரயில்வே கேட் உள்ளது. இங்கு சரக்கு ரயில் செல்லும்போது, ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாநகரப் பேருந்தில் பயணிக்கும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மாட்டு மந்தை மேம்பாலத்தை நீட்டித்து, தற்போது திறந்த வெளியாக உள்ள இந்த ரயில்வே தடத்தில் மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


