வெயிலுக்கு பெயர் பெற்ற வேலூர் மாவட்டம் விவசாயத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டமாக திகழ்கிறது. அதை மெய்ப்பிப்பது போல விளங்குகிறது இங்குள்ள ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள். வேலூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களைக் கொண்ட பகுதி என்று அழைக்கப்படுகிற இந்த ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காடுகளும் மலைகளும் நிறைந்து இயற்கை கொஞ்சி விளையாடுகிறது. வயல் பகுதிகளும் மிகுந்திருப்பதால் இங்குள்ள பல குடும்பங்கள் விவசாயத்தையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று காணப்படும் இந்தப் பகுதிகளில் கொய்யா, வாழை, மா, புளி, கேந்தி, முல்லை, ரோஸ், மல்லி என பல பயிர்கள் செழித்து வளர்கின்றன. இத்தகைய அழகிய பகுதிகளில் ஒன்றான அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்ற விவசாயி பருவத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு மலர் வகைகளை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். ஒரு மாலைப்பொழுதில் தனது வயலில் மலர் பறித்துக்கொண்டிருந்த சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.
`` பல விவசாயிகள் வேளாண் தொழிலில்ல பெரிதாக லாபம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் சரியான பருவத்தில் பயிர் செய்து பராமரிப்பை மேற்கொண்டால் பெரிய லாபம் இல்லா விட்டாலும் ஓரளவு லாபத்தை நிச்சயம் பார்க்கலாம். எனது தாத்தா, அப்பா தொடங்கி இப்போது நானும் விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். நாங்கள் காலம் காலமாக பூக்களைத்தான் அதிகமாக சாகுபடி செய்து வருகிறோம். குறிப்பாக கேந்தி, கோழிக்கொண்டை பூக்களை சாகுபடி செய்து வருகிறோம்.இதற்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை நன்கு ஏர் பூட்டி உழுது ஆடு மற்றும் மாட்டு எருக்களை கொட்டி வைப்போம். கிணற்று நீரை மட்டுமே நம்பி பயிர் செய்வதால் எருக்களை கொட்டிய நிலத்தில் தண்ணீரை பாய்ச்சி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வோம். இதைத்தொடர்ந்து ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் கேந்தி செடிகளை நர்சரியில் இருந்து வாங்கி வந்து நடவு செய்ய ஆரம்பித்து விடுவோம். நம்ம பகுதியில் ஒரு கேந்தி நாற்று
ரூ.2க்கு விற்பதால் ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று வாங்கி வருவோம். அங்கு ஒரு நாற்று ரூ.1.50 முதல் ரூ.1.20க்கு விற்பதால் எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மிச்சமாகிறது. நிலத்தில் பாத்தி கட்டி நாற்றுகளை நடவு செய்யத் தொடங்கி விடுவோம். சிவப்பு, மஞ்சள் நிறம் கொண்ட கேந்தி பூக்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவற்றை அதிகளவில் சாகுபடி செய்கிறோம். செடி நட்ட நாள் முதல் 45 நாட்களுக்கு நிலத்தில் 2 முறை களை எடுப்போம். அதேபோல் பூச்சி தாக்காமல் இருக்க உரிய மருந்துகளைத் தெளித்து பராமரிப்போம். இதுபோல் பராமரித்து வரும் நிலையில் 45 நாட்கள் முடிந்து பூக்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அன்று முதல் 90 அல்லது 120 நாட்கள் வரை கேந்திப் பூக்களை அறுவடை செய்வோம். காலையில் விற்பனை தொடங்குவதால் முதல் நாள் மாலையில் நாங்கள் குடும்பத்துடன் பூக்களைப் பறிப்போம். பின்னர் அந்தப் பூக்களை மறுநாள் அதிகாலையில் மொத்தமாக வேலூர் மார்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து விடுவோம்.
இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் கோழிக்கொண்டை பூக்களையும் பயிர் செய்கிறோம். இதற்கு செலவு மிக குறைவு. ஒருமுறை கோழிக்கொண்டையை பயிரிட்டால் அதில் கிடைக்கும் விதைகளை எடுத்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு சேமிக்கப்படும் விதைகளை அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்திக்கொள்வோம். கூலி ஆட்களை வைக்காமல் குடும்பத்துடன் நாங்களே ஏர் உழுவது, களை பறிப்பது, மருந்து தெளிப்பது போன்ற வேலைகளை பார்த்துக்கொள்வோம்.இருந்தாலும் மொத்தம் ரூ.40 ஆயிரம் வரை செலவு ஆகிவிடும். இந்த 2 வகையான பூக்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதில் செலவு போக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை லாபம் பார்க்க முடிகிறது. கேந்தி பூக்களின் விலையை பொருத்தே இந்த லாபம் இருக்கும். அனைத்து நேரத்திலும் இந்த லாபத்தைப் பெற முடிவதில்லை. இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தால் பயிர்கள் அனைத்தும் வீணாகி விடுகிறது. இருந்தாலும் இந்த விவசாயம் அடுத்தடுத்த பருவத்தில் நம்மைக் காப்பாற்றி விடும். இதனால் நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சந்திரன்: 91597 37415.