இயற்கையான முறையில் கிடைக்கப்பெறும் உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறையை நமது உழவர்கள் ஆதிகாலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். அதிமுக்கியமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் கழிவுகளை உரமாக்கி விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கி வருகிறார்கள். அத்தகைய கால்நடைக்கழிவு உரங்களில் கோழிகளின் கழிவு உரங்கள் மிகுந்த பயனளிப்பவை. இந்த உரங்கள் பல்வேறு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அவை குறித்து சற்று சுருக்கமாக பார்ப்போம்.
மக்கிய உரம் தயாரிக்கும் முறை
குறிப்பிட்ட அளவில் கோழி எச்சங்கள் சேகரிக்கப்பட்டு, துண்டாக்கப்பட்ட வைக்கோல் உடன் கலக்கப்படுகிறது. ஒரு டன் கழிவுகளுடன் 250 கிராம் அடங்கிய 5 பாக்கெட்டுகள் சிப்பிக்காளான் விதை உட்செலுத்தப்பட்டு, பின்பு கோழி எரு மற்றும் வைக்கோல் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. குவியலின் ஈரப்பதம் 40 - 50 சதவீதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிப்பதுடன் 21, 35, 42ம் நாளில் நன்றாகக் கிளறிவிட வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் 50 நாட்களுக்குள் கோழிப்பண்ணைக் கழிவு மற்றும் வைக்கோல் கலவையானது முழுமையான மக்கிய உரமாக மாற்றப்படுகிறது.இந்த மட்கிய உரத்தில் தழைச்சத்து 1.89 சதவீத அளவிலும், மணிச்சத்து 1.83 சதவீத அளவிலும், சாம்பல்சத்து 1.34 சதவீத அளவிலும், கரிம - தழைச்சத்து 12.20 என்ற விகிதத்திலும் அடங்கியுள்ளன.
நார்க்கழிவு மற்றும் சிப்பிக் காளான் விதை மூலம் மக்கிய உரம் தயாரிக்கும் முறை
குறிப்பிட்ட அளவு புதிய கோழிப்பண்ணைக் கழிவுகளை சேகரித்து, மக்குவதற்கு ஏதுவாக கரிமம்-தழைச்சத்தின் விகிதம் 25-30 உள்ளவாறு, உலர்ந்த நார்க்கழிவுடன் 1:15 விகிதத்தில் கலக்கப்படுகிறது. சிப்பிக்காளான் விதை, ஒரு டன் கழிவுப்பொருளுக்கு 2 பாக்கெட்டுகள் என்ற விகிதத்தில் சேர்த்து பின் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. குவியலின் ஈரப்பதம் 40-50 சதவீதம் வரை பராமரிக்கப்பட்டு 21, 28 மற்றும் 35ம் நாளில் இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். 28ம் நாள் கிளறும்போது சிப்பிக்காளான் விதை மீண்டும் ஒரு டன்னுக்கு 2 பாக்கெட்டுகள் சேர்க்கப்பட வேண்டும். 45 நாட்களில் நன்கு தரம் உள்ள மக்கிய உரம் பெறப்படுகின்றது. இந்த மக்கிய உரத்தில் தழைச்சத்து: 2.08 சதவீத அளவிலும், மணிச்சத்து 2.61 சதவீத அளவிலும், சாம்பல்சத்து 0.94 அளவிலும், கரிம - தழைச்சத்து 13.54 என்ற விகிதத்திலும் உள்ளன.
கூண்டு அமைப்பின் கீழ் குழி அமைத்து மக்கிய உரம் தயாரிக்கும் முறை
கூண்டு அமைப்பின் கீழ் குழி உருவாக்கி அதில் 5 செ.மீ மணலையும் 10 செ.மீ.க்கு நார்கழிவுகளையும் நன்றாக பரப்பிவிட வேண்டும். இதில் கோழிஎச்சம் சேகரிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு-கோழி எச்சக்கலவையை எரு கொட்டகைக்கு மாற்றி நிழலின் கீழ் குவியலாக்க வேண்டும். குவியலின் ஈரப்பதத்தின் அளவு 40-50 சதவீதம் வரை இருக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். இந்தக் கலவையானது மற்றுமொரு 30 நாட்களுக்கு மட்க வைக்கப்படுகிறது. 120 நாட்களுக்குள் நன்கு மக்கிய சத்துள்ள உரம் கிடைக்கிறது. இந்த மக்கிய உரத்தில் தழைச்சத்து 2.08 சதவீத அளவிலும், மணிச்சத்து 1.93 சதவீத அளவிலும், சாம்பல்சத்து 1.41 சதவீத அளவிலும், கரிம - தழைச்சத்து விகிதம் 10.16 என்ற விகிதத்திலும் இருக்கும்.
குப்பைக்கூழ் படிவுகள் மூலம் மக்கிய உரம் தயாரிக்கும் முறை
கோழிப்பண்ணையில் தரையின் மேற்புறம் 5-10 செ.மீ. உயரம் வரை உலர்ந்த நார்க்கழிவினை அடுக்குகளாக பரப்பி, இதன் மேல் பறவைகள் வளர்க்கப்பட்டு எச்சங்கள் சேகரிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குப் பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு, கோழி எச்சங்கள் மற்றும் இறகுகள் எரு கொட்டகைக்கு மாற்றப்படுகிறது. பின் நிழலின் கீழ் குவியலாக்கப்படுகின்றன. குவியலின் ஈரப்பதம் 40-50 சதவீதம் வரை பராமரிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும். 30 நாட்களுக்குள் நல்ல தரம் வாய்ந்த மக்கிய உரம் கிடைக்கும். இந்த உரத்தில் தழைச்சத்து 2.13 சதவீத அளவிலும், மணிச்சத்து 2.40 அளவிலும், சாம்பல்சத்து 2.03 சதவீத அளவிலும், கரிம - தழைச்சத்து விகிதம் 14.02 என்ற அளவிலும் இருக்கும்.

