Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு!

``நாட்டுக்கோழிகளின் மகத்துவத்தை உணர்ந்த பலர் தற்போது நாட்டுக்கோழி இறைச்சியை வாங்கிப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். ஆனால் சந்தைக்கும் வரும் அத்தனையும் உண்மையான நாட்டுக்கோழியா? என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஆம்.. நாட்டுக்கோழிகள் என்றாலும் பலர் அவற்றை கூண்டுக்குள் அடைத்துதான் வளர்க்கிறார்கள். நாட்டுக்கோழி என்றால் திறந்தவெளி களில் மேய வேண்டும். தானியங்கள், பூச்சி புழுக்களை அவைகளாகவே தேடி உண்ண வேண்டும். அப்போதுதான் அவை உண்மையான நாட்டுக்கோழி’’ என அதிரடியாக பேசத்துவங்கினார் ராமநாதன்.காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட ராமநாதன், இயற்கை எழில் சூழ்ந்த நவத்தாவு என்ற கிராமத்தில் திறந்தவெளி மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். சாக்கோட்டை அருகில் உள்ள நவத்தாவு கிராமத்திற்கு வெயிலும், மழையும் கலந்த ஒரு பின்மதிய வேளையில் பயணித்தோம். 20 ஏக்கரில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் ராமநாதனின் பண்ணையில் தென்னை, வாழை, செம்பருத்தி, துளசி என பல பயிர்கள் பசுமை கட்டி நிற்கின்றன. அவற்றுக்கு இடையே திறந்தவெளியில் நாட்டுக்கோழிகளும், வெள்ளாடுகளும் மேய்ச்சல் காண்கின்றன. இவற்றுக்கு தீவனம் வழங்கியபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

`` இது எங்களுக்கு பூர்விக நிலம். அப்பா இதில் அதிகம் நெல் சாகுபடிதான் செய்வார். வயோதிகத்தால் அவருக்கு பிறகு நான் நிலத்தைக் கவனித்துக்கொள்கிறேன். கடந்த 25 வருடமாக விவசாயம் பார்க்கிறேன். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு அவசியம் என்பதைத் தாண்டி, அதையே நான் பிரதான தொழிலாக கவனிக்கிறேன். இங்கு நடப்பது முழுக்க முழுக்க இயற்கை விவசாயம். இயற்கையான கோழி வளர்ப்பு. இயற்கையான ஆடு வளர்ப்பு.20 வருடத்திற்கு முன்பு நாட்டுக்கோழி வளர்ப்பைத் தொடங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை மேய்ச்சல் முறைதான். பெயருக்கு சில கூண்டுகள் உள்ளன. இரவில் அவற்றில் சில கோழிகள் அடைந்துகொள்ளும். அவற்றையும் காலை 6 மணிக்கு திறந்து வெளியில் விடுவோம். பல கோழிகள் இங்குள்ள மரங்களிலேயே அடைந்துகொள்ளும். சிறுவிடை, பெருவிடை, சோனாலி என 700 கோழிகள் உள்ளன. சுத்தமான நீர் இருக்கிறது. நிழல் இருக்கிறது. ஈரப்பதமான சூழல் நிலவுகிறது. இந்த வசதிகள் இருந்தாலே கோழிகளுக்கு பெரியளவில் நோய்கள் வராது. நான் கோழிகளுக்கு ஊசி எதுவும் போடுவது கிடையாது. காலை 6 மணிக்கு வெளியில் மேய செல்லும் கோழிகள் 10 மணிக்கு வயலுக்குள் வந்துவிடும். அதில் இருந்து 4 மணி வரை தோட்டத்திற்குள்ளேயே மேயும். அந்த சமயத்தில் முட்டை போட்டுவிடும். இதனால் இந்த நேரத்தில் யாரையும் தோட்டத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்.

11 ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. வாழை, செம்பருத்தி உள்ளிட்ட பயிர்களும் உள்ளன. அவற்றுக்கு இடையே கோழிகள் மேயும். 4 மணிக்கு பிறகு மீண்டும் தோட்டத்திற்கு வெளியே மேய்ச்சலுக்கு சென்று 6 மணிக்கு தோட்டத்திற்கு வந்துவிடும். மீண்டும் அவை மரத்திலோ, கூண்டிலோ அடைந்துகொள்ளும். முழுக்க முழுக்க மேய்ச்சலில் வளர்வதால் கோழிகள் ஆரோக்கியமாக உள்ளன. இறைச்சிக்கும் நல்ல டிமாண்ட். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் வரும். இறைச்சியாகவே ஒரு கிலோ ரூ.750 என டோர் டெலிவரி செய்துவிடுவேன். வாரத்திற்கு 25-30 கிலோ இறைச்சி விற்பனை ஆகும். எப்படியும் 20 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் வருமானம் கிடைக்கும். மாதம் 80 ஆயிரம் தாண்டி வருமானம் வரும். முட்டைகளை ரூ.10 என விற்கிறேன். தினமும் 150 முட்டைகள் கிடைக்கும். இது கூடுதல் வருமானம்.

ஆடுகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மேய்ச்சலில் இருக்கும். 2 மணிக்கு மேல் அடைப்புக்கு வந்துவிடும். இங்குள்ள ஒவ்வொரு தாய் ஆடும் 3 குட்டி போடும். பால் பற்றாக்குறைக்கு பசும்பாலை வாங்கி கொடுக்கிறோம். வருடத்திற்கு 60-80 குட்டிகள் கிடைக்கின்றன. காலையில் மேய்ச்சலுக்கு விடுவதற்கு முன்பு அடர்தீவனம் கொடுப்போம். மேய்ச்சல் முடிந்து வரும்போது 2 மணிக்கு கடலைப்புண்ணாக்கையும், கோதுமைப்புண்ணாக்கையும் தண்ணீரில் கலந்து கொடுப்போம். அதை 4 மணி வரையும் நிழலில் அசைபோடும். மாலை 6 மணிக்கு தோட்டத்தில் விளையும் பசுந்தீவனங்களைக் கொடுப்போம். ஆடுகளுக்காக வேலிமசால், குதிரை மசால், கோ4, அகத்தி வளர்க்கிறோம். இதில் தினமும் ஏதாவது ஒன்றைத் தருவோம். கிடாக்களை பக்ரீத் போன்ற விசேஷ நாட்களில் விற்பனை செய்வோம். இவை பெரும்பாலும் கருப்புநிற குட்டிகள் என்பதால் கிடாவெட்டு போன்ற விசேஷங்களுக்கு வாங்கிச் செல்வார்கள். ஒரு வருட வயதுடைய பெட்டை ஆடுகளை வளர்ப்புக்காக விற்பனை செய்வேன். ஒரு குட்டி 12 ஆயிரம், 13 ஆயிரத்திற்கு விற்கும். வருடத்திற்கு குட்டி விற்பனை மூலம் நான்கரை லட்சம் வருமானம் கிடைக்கும். இறைச்சிக்கான விற்பனை மூலம் 5 லட்சம் கிடைக்கும். வருடத்திற்கு ஆடு வளர்ப்பின் மூலம் ஒன்பதரை லட்ச ரூபாய் கிடைக்கும்.

கோழிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை நான் எடுத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை ஆட்டுத்தீவனம், தொழிலாளர் கூலி போன்றவற்றுக்கு செலவு செய்வேன். ஆட்டின் மூலம் கிடைக்கும் அத்தனையும் லாபம்தான். கோழி, ஆடுகளின் கழிவுகளின் பயிர்களுக்கு இயற்கை உரமாக்கிவிடுவேன். தென்னை மூலம் 2 மாதத்திற்கு ஒருமுறை 10 ஆயிரம்காய்கள் கிடைக்கும். சமீபத்தில் தேங்காய் விற்பனை மூலம் ரூ.2 லட்சம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் இந்த கணக்கு கூடவும், குறையவும் செய்யும். ஆனால் நல்ல லாபம்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

ராமநாதன்:98942 38443

சின்னையா நடேசன்:80152 43382.

கூட்டுக்குடும்பம்

நாட்டுக்கோழி முட்டை, கூமுட்டை குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்த வைரல் வீடியோவில் பேசிய இயற்கை வேளாண் வல்லுநர் சின்னையா நடேசனின் வழிகாட்டுதலையும் ராமநாதன் பின்பற்றி வருகிறார். நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து சின்னையா நடேசன் கூறுகையில், `` ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம் எப்படி முக்கியமோ, அதேபோல நாட்டுக்கோழியும் நாட்டுப்பசுவும் முக்கியம். இவை நமது வயலையும், வயிற்றையும் நிச்சயம் நிரப்பும். பசு நமது பயிர்களின் கழிகளை உண்டு, அதன் கழிவை வயலுக்கு உரமாக்கும். இப்படி மரபாகவே அது நமது விவசாயத்தோடு ஒன்றி வாழ்கிறது. நம் எண்ணப்படியே நமது வயல் விளையும். நாட்டுக்கோழிகள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. கூட்டாக சேர்ந்து இரை தேடும். தாய்க்கோழிகள் பாதுகாப்பான இடத்தைத் தேடி முட்டையிடும். குஞ்சுகளை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும். சேவல்கள் விடியலை நமக்கு குறிப்பால் உணர்த்தும். குஞ்சுகள் மட்டுமல்லாது அனைத்து கோழிகளுக்கும் பாதுகாப்பாய் இருக்கும். இவ்வாறு நாம் நாட்டுக்கோழிகளையும், நாட்டுப்பசுக்களையும் வளர்த்துக்கொண்டே விவசாயம் செய்வது ஒரு காந்த ஓட்ட வாழ்வியலை நமக்கு கிடைக்கச்செய்யும்’’ என்கிறார்.

ஏற்றுமதி

ஆடு மற்றும் நாட்டுக்கோழிகளின் கழிவுகள் பயன்படுத்தப்படும் ராமநாதனின் தோட்டம் முழுக்க முழுக்க ஆர்கானிக் தோட்டம் என்பதால் இங்கு விளையும் தேங்காய்க்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்டு துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.