Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் தொடர் கனமழையால் வேகமாக நிரம்பும் அணைகள்: 3,631 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: 90 அணைகளில் 87.10% நீர் இருப்பு

வங்க கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை நோக்கி கடந்த 1ம் தேதி நகர்ந்தது. அதைதொடர்ந்து இந்த அமைப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது. நேற்று முன்தினம் தென் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, வட மாவட்டங்கள், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி சென்று அதன்பின் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக இயல்நிலை பாதிக்கப்பட்டது. டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணிகளும் நடத்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அணை​கள், ஏரி​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. வடதமிழகத்தின் தென் பெண்ணையாறு, ஆரணியாறு, செய்யாறு உள்ளிட்ட ஆறுகளிலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த மழையால் குடிநீர் ஆதாரங்களான நீர் நிலைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கனமழை வருவதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் திறம்பட செய்தனர். இருப்பினும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும், ஏற்​கனவே நிரம்​பி​யுள்ள நீர்​நிலைகளுக்கு வரும் தண்​ணீர் உபரி நீராக அப்​படியே வெளி​யேற்​றப்​படு​கிறது.

அதன்படி, தமிழகத்தின் உள்ள 90 அணைகளில் மொத்தமாக 87.10 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவான 224.343 டிஎம்சியில் நேற்றைய நிலவரப்படி 195.400 டிஎம்சி நீர் உள்ளது. அதேபோல் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,141 பாசன ஏரிகளில் 3,865 பாசன ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரிகள் இல்லை. மீதமுள்ள 37 மாவட்டங்களில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,141 பாசன ஏரிகள் உள்ளன.

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரை மாவட்டத்தில் 1,340, புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,132 ஏரிகள் உள்ளன. மேலும், சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 564, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381, திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 506, திருவண்ணாமலை மாவட்டத்தில் 697, திருநெல்வேலி மாவட்டத்தில் 780, தென்காசி மாவட்டத்தில் 543, ராமநாதபுரம் மாவட்டத்தில் 639 ஏரிகள் இருக்கின்றன. மிக குறைந்தபட்சமாக மயிலாடுதுறையில் 2 ஏரிகளும், நாகப்பட்டினத்தில் 3 ஏரிகளும் உள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதுடன், சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருவதால் ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. அதன்படி, நேற்றைய நிலவரப்படி அதிபட்சமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 1340 நீர்தேக்கங்களில் 463 நீர்த்தேக்கங்கள் முழுஅளவு எட்டியுள்ளது. அடுத்தப்படியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2040 நீர்த்தேக்கங்களில் 433 நீர்த்தேக்கங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 641 நீர்த்தேக்கங்களில் 372 நீர்த்தேக்கங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 697 நீர்தேக்கங்களில் 364 நீர்த்தேங்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள 543 நீர்த்தேக்கங்களில் 342 நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவு நீர் நிரம்பியுள்ளது.

அதை தொடர்ந்து 2,955 நீர்த்தேக்கங்கள் 76 சதவீதத்திற்கும் அதிகமான நீர்இருப்பு உள்ளது. 2,538 நீர்த் தேக்கங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது. 2668 நீர்த்தேக்கங்களில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 1749 நீர்த்தேக்கங்களில் 25 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. அதேபோல் 366 நீர்த்தேக்கங்களில் தற்போது வரை நீர் இருப்பு இல்லை. அதாவது ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்படும் பகுதிக்கு கீழே நீர் இருப்பு இருந்தால் அந்த ஏரிகளில் நீர் இல்லை என கணக்கிடப்படுகிறது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 ஏரிகளிலும், அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 74 ஏரிகளிலும் நீர் இருப்பு இல்லை.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் மொத்தம் 90 அணைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 343 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி இவற்றில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 399 மில்லியன் கனஅடி (87.10 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது என நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மொத்தமுள்ள 1551 ஏரிகளில் நேற்று மாலை நிலவரப்படி 562 ஏரிகள் முழு கொள்ளவான 100 சதவீதம் நிரம்பியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை, வீராணம் ஆகிய 6 நீர்த்தேக்கங்களில் 86.72 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 85 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.