சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் தீவிர கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்து உள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயல் ஆகும். புயல் மற்றும் பருவமழையை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், கிண்டி மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
