Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சென்னை வரும் ரயில்கள் மாற்று வழியில் இயக்கம்

ஆந்திரா: ஆந்திராவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சென்னை வரும் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஆந்திராவில் மழையால் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதால் சென்னைக்கு மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகிறது. 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டவாளம் அடித்துச்செல்லப்பட்டதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மழையால் 10 பேர் பலியாகினர்.

ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குறிப்பாக மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிகளவில் மழை பெய்து இருப்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தென் மத்திய ரயில்வே 9 ரயில்களை வெவ்வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது, பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக தவித்து வருகின்றனர்.

நிஜாமுதீன் கன்னியாகுமரி விரைவு ரயில் விஜயவாடா, குண்டூரில் நிற்காது. சென்னை - நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு ரயில் விஜயவாடா, துவாடா, நாக்பூர் வழியாக இயக்கம். சென்னை சென்ட்ரல் வைஷ்ணவி தேவி கட்ரா அந்தமான் விரைவு ரயில் மாற்று வழியில் இயக்கம். மதுரை - ஜபல்பூர் அதிவேக சிறப்பு ரயில், துவாடா, விஜயநகரம் வழியாக இயக்கப்படும்.

மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் கூடூர், தெனாலி, காசிபேட் வழியாக இயக்கப்படும். சென்னை - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் தெனாலி, செகந்திராபாத் வழியாக இயக்கப்படும். நாக்பூர் - விஜயவாடா இடையே எந்த ரயில் நிலையத்திலும் ரயில் நிற்காமல் இயக்கப்படும். தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் வழக்கமான பாதைக்கு பதில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.