வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வேலூரில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. பேரணாம்பட்டில் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்தது. அங்கு மட்டுமே மாவட்டத்தில் மிகஅதிகபட்சமாக 12.28 செ.மீ மழை பதிவானது. அதேபோல் கே.வி.குப்பம் வட்டாரத்திலும் கனமழை பெய்தது. ராஜாதோப்பு நீர்பிடிப்பு பகுதிகளில் 8.8 செ.மீ மழை பதிவானது.
இந்த மழையின் காரணமாக பேரணாம்பட்டு கொட்டாறு, மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதேபோல் குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றிலும், ஒடுகத்தூர் உத்திரகாவேரியாற்றிலும், அமிர்தி நாகநதி ஆற்றிலும், பொன்னையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பொன்னை சிறிய தடுப்பணை நிரம்பி வழியும் நிலையில் பிற தடுப்பணைகளிலும் நீர்நிரம்பி வருகிறது.
மோர்தானா அணை நிரம்பி அதில் இருந்து உபரிநீர் அப்படியே கவுண்டன்யா ஆற்றில் விடப்படுகிறது. ராஜாதோப்பு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த மழையின் காரணமாக பேரணாம்பட்டு நகரில் தாழ்வான பகுதிகளிலும், வேலூர் நகரில் திடீர் நகர், முள்ளிப்பாளையம், கன்சால்பேட்டை, சமத் நகர், பூங்காவனத்தம்மன் நகர் பகுதிகளிலும் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
அதேபோல் கோட்டை அகழியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்நிலைகளின் அருகில் யாரும் துணி துவைக்கவோ அல்லது குளிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.