சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை மற்றும் கடம்பூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், தீபாவளி தினத்தன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கனமழை காரணமாக திம்பம் மலைப்பாதையில் 7, 8, 20 மற்றும் 27வது கொண்டை ஊசி வளைவுகளில் மொத்தம் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை துறையினர், ஆசனூர் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கொட்டி கிடந்த மண் மற்றும் கற்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலை பாதையிலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டதால், கடம்பூர் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சீரானது. தீபாவளி தினத்தன்று மலைப்பாதைகளில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.