Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனமழை எச்சரிக்கை; வங்கக் கடலில் புயல் சின்னம்: அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரத்தில் புயலாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. புயல் நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்ட நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. இடையில் தென் சீனக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக உருவான கடும் புயல்கள் காரணமாக தமிழகத்தில் சில நாட்கள் வறண்ட வானிலை காணப்பட்டது.

கடந்த இரண்டு வாரத்தில் வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது புயல் உருவாகி அதன் மூலம் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பருவமழை பெய்யும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இலங்கை அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இலங்கையில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்கள் அங்கு மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் அம்பாறைக்கு மிக அருகில் நிலை கொண்டு இருக்கிறது.

யாழ்ப்பாணத்துக்கு தெற்கே 200 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 250 தெற்கு -தென்கிழக்கேயும் ராமேஸ்வரத்துக்கு 200 கிமீ தொலைவிலும் தற்ேபாது நிலை கொண்டு இருக்கிறது. இது இலங்கையின் தென்கிழக்கு முனையில் இருந்து வடக்கு முனையான காங்கேசன் துறையில் நாளை இறங்கும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று தமிழகத்தின் கோடியக்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று 3 மணிநேரத்தில் புயலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பகுதியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மா வட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, , மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேலும் இன்று இரவு முதல் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தெ ாடங்கும். பின்னர் 28 மற்றும் 29ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

வட மாவட்டங்களை பொறுத்தவரையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் தமிழக கரையை நெருங்கி வருவதை அடுத்து அனைத்து துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு 1, 2, 3, 4 வரை ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர், மாநில பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கனமழை பெய்யும் மாவட்டங்களில், காணொலி காட்சி மூலமாக ஆட்சியர்கள் உடன் முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தார். இதற்கிடையே கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.