சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டிட்வா புயல், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. காலையில் மழை சற்று ஒய்ந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், கிண்டி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஆலந்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

