Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனமழையால் உற்பத்தி பாதிப்பு லோடு கிடைக்காமல் 30% தமிழக லாரிகள் வடமாநிலங்களில் தவிப்பு

சேலம்: வட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் அங்கு பல தொழிற்கூடங்கள் இயங்கவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்ற 30 சதவீத லாரிகளுக்கு லோடு கிடைக்கவில்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் உள்ளன.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பெரிய வெங்காயம், பூண்டு, கொண்டைக்கடலை, கடலை பருப்பு, துவரம் பருப்பு உள்பட மளிகைப்பொருட்களும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பிவிசி பிளாஸ்டிக் பொருட்களும் கொண்டு வரப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, வெல்லம், கயிறு, இரும்பு பொருட்கள், மஞ்சள், கோழித்தீவனம் உள்பட பல்வேறு பொருட்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு பல தொழிற்கூடங்கள் இயங்காமல் உள்ளது. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் உள்பட பல்வேறு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு லோடு ஏற்றிச்சென்ற பல லாரிகளுக்கு லோடு கிடைக்காமல் அங்ேகயே நாள் கணக்கில் நிற்பதாகவும், இதனால் தங்களுக்கு வருவாய் பாதித்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனராஜ் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, வெல்லம், தேங்காய், கோழிதீவனம், நூல், சிமென்ட், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்பட பல பொருட்களை வடமாநிலங்களுக்கு ஏற்றிக்கொண்டு தினமும் 50 ஆயிரம் லாரிகள் செல்கிறது. அதேபோல் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட லாரிகள் பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிக்கொண்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக லாரி தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது. டீசல், டயர், ஆயில், லாரிகளுக்கு தேவையான உபகரணங்கள், டிரைவர் சம்பளம் உள்ளிட்டவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல வகையில் அரசுக்கு வரி செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் லாரி தொழிலை நடத்துவதே சிரமமாக உள்ளது. ஒன்று, இரண்டு லாரி வைத்திருப்பவர்கள் லாரிகளை இயக்காமல் சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். சில லாரி உரிமையாளர்கள் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு மாதமாக வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு பல தொழிற்கூடங்களில் பொருட்களின் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு லோடு ஏற்றி சென்ற லாரிகளுக்கு அங்கு சரிவர லோடு கிடைக்கவில்லை. சுமார் 30 சதவீத லாரிகளுக்கு லோடு கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரி தொழிலை நம்பியுள்ள டிரைவர், கிளினீர், சுமை தூக்குவோர், உரிமையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் போதிய வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தனராஜ் கூறினார்.