ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி ராமேஸ்வரத்தில் நேற்று பகலில் சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இன்று காலையிலும் கனமழை நீடித்ததால் பொதுமக்கள், மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ராமேஸ்வரத்தில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பனில் 62 மி.மீ, தங்கச்சிமடத்தில் 40.60 மி.மீ. மழை பாதிவானது. தீவு முழுவதும் கடந்த 12 மணி நேரத்தில் மொத்தம் 15.96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடலுக்கு செல்ல தடை உத்தரவு தொடர்வதால் மீனவர்கள் இன்று 3வது நாளாக வீடுகளில் முடங்கினர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகின்றனர்.


