மும்பை: மும்பையில் கனமழை காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையில் பல இடங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரில் கார்கள் மூழ்கின. மும்பையில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் ராய்கட் பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.
செம்பூர், தாதர், ஹிந்த்மாதா, அந்தேரி, கிங்ஸ் சர்க்கிள் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை - தானே இடையே அனைத்து ரயில்சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற பிற அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மராட்டியத்தில் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் 12 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை, நான்டெட் உள்பட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் காலை 4 மணியில் இருந்து 11 மணிக்குள் 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் பகல் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.