செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டியது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் லேசாக சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்த மழை பொதுமக்களுக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது.