Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 7,000 ஏக்கர் குறுவை சாய்ந்தது: சுவர் இடிந்து மூதாட்டி பலி

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவும் பல்வேறு இடங்களில் மழை பொழிந்தது. நாகை மாவட்டத்தில் பரவலாக நேற்றிரவு, இன்று அதிகாலை மழை பெய்தது. வேதாரண்யத்தில் இரவு 11 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணி வரை 4 மணி நேரம் இடி, காற்றுடன் பலத்த மழை கொட்டியது. மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை பரவலாக பொழிந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்பட மாவட்டம் முழுவதும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் இரவு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் பகுதிகளில் வெயில் அடித்ததால் கடந்த 2 நாட்களாக உப்பு உற்பத்தி மும்முரமாக நடந்தது. நேற்றிரவு மீண்டும் மழை பெய்ததால் உப்பளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காத்தான்விடுதி மற்றும் நம்பன்பட்டி சுற்று வட்டார கிராமத்தில் 25 ஏக்கருக்கும் மேல் அறுவடைக்கு தயாராக வாழைத்தாருடன் நின்ற வாழை மரங்கள் சாய்ந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் தொழுதூர், கன்னியாகுடி, கற்கோயில் கிராமங்களில் நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்திருந்த 50 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. திருச்சி பனையபுரத்திலும் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறு, வாட்டாக்குடி, நீர்மலை, ஓரடிஅம்பலம், வடுவூர், ஆயிமூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 7,000 ஏக்கர் குறுவை சாய்ந்தது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பிரம்ம தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து குளத்துக்குள் விழுந்தது. அப்போது அந்த சுவரை ஒட்டி நிறுத்தியிருந்த கார், டூ வீலர் குளத்துக்குள் விழுந்து மண்ணில் புதைந்தது. நேற்று காலை கிரேன் மூலம் அவை மீட்கப்பட்டது. இதேபோல் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் வளாக வடக்கு பகுதியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

மூதாட்டி பலி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணி திருவாசல்தோப்பை சேர்ந்தவர் ராசாத்தி(68). மழையால் இவரது கூரை வீட்டில் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கி ராசாத்தி பலியானார்.