*அருப்புக்கோட்டை விவசாயிகள் கவலை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 20 ஏக்கரில் பயிரிட்ட 20 ஆயிரம் வாழைமரங்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பந்தல்குடி, வாழ்வாங்கி, செட்டிக்குறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, கம்பு, சோளம், குதிரைவாலி போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். சிதம்பராபுரம், சின்ன செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கிணற்று பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சிதம்பராபுரம், சின்ன செட்டிக்குறிச்சி பகுதிகளில் சுமார் 20 ஏக்கரில் இருந்த 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீசிய சூறைக்காற்றுக்கு வாழைகள் முறிந்து சேதமடைந்தன. தற்போது வீசிய சூறைக்காற்றுக்கும் வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.
ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்த நிலையில், அறுவடை நேரத்தில் வாழைகள் முறிந்து சேதமடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.