சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுசேரியில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் தெற்கு வங்கக்கடலில் அனைத்து பகுதிகள், அந்தமான் கடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என்றும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.