சென்னையில் கனமழை எதிரொலி; வானில் நீண்ட நேரமாக வட்டமிட்ட 4 விமானம் பெங்களூரு சென்றது: 15 விமானங்கள் தாமதம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. குறிப்பாக, ஐதராபாத்தில் இருந்து 140 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூருவில் இருந்து 74 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பாட்டில் இருந்து 268 பயணிகளுடன் வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதேபோல் கோலாலம்பூர், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூர் மற்றும் டெல்லி உட்பட 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டம் அடித்து பறந்துவிட்டு தாமதமாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கோலாலம்பூர், பிராங்க்பாட், ஹாங்காங், இலங்கை, துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், டெல்லி, புனே உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும் சென்னையில் மழை ஓய்ந்த பின்பு நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல், ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தன. விமான சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.