*விவசாயிகள் வேதனை
சேலம் : தேங்காய் விளைச்சல் கடும் பாதிப்பால் தோப்புகளில் தேங்காய் இல்லாமல் மட்டைகளாக காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் கோபிச்செட்டிபாளையம், அரச்சலூர், காங்கேயம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்பட பல பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இதைதவிர கேரளாவில் தென்னை மரங்கள் அதிகளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் கடந்தாண்டு தென்னைமரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக தென்னைமரங்களில் காய்ப்பு குறைந்தது. இதனால் கடந்த ஓராண்டாக தேங்காய் வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக இருப்பில் இருந்த தேங்காய் மட்டுமே விற்பனை வந்தது. அவைகளும் மட்டை உரித்து விற்பனை அனுப்பினர்.
கடந்த சில நாட்களாக தோப்பு மற்றும் மண்டிகளுக்கு தேங்காய் வரத்து அறவே சரிந்துள்ளது. இதனால் சில தோப்புகளில் தேங்காய் இல்லாமல் வெறும் மட்டைகளாக காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சேலம் சரகத்தில் பல்லாயிரம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய் ஆங்காங்கே தோப்புகளில் குவித்து மட்டை உரித்து தேங்காயாக விற்பனைக்கு அனுப்பப்படும். கடந்த ஓராண்டாக தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் தேங்காய் தேவையை தமிழகம் தான் பூர்த்தி செய்கிறது.
ஒரு பக்கம் தேங்காய் விளைச்சல் பாதிப்பு மறுபுறம் இருப்பில் இருந்த தேங்காயும் மட்டை உரித்து தேங்காயாக விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக தோப்பில் தேங்காய் இல்லாமல் மட்டைகளாக காட்சியளிக்கிறது. இதேநிலையில் சென்றால் எதிர்வரும் மாதங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.