உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இதய ஈரிதழ் வால்வு மூலம் 58 வயது பெண்ணுக்கு சிகிச்சை: காவேரி மருத்துவமனை புதிய சாதனை
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக, 58 வயதான பெண் நோயாளி கடுமையான மூச்சுத் திணறல், பாதங்களில் வீக்கம் மற்றும் அதிக களைப்பு ஆகிய பிரச்னைகளால் கடும் சிரமத்தை அனுபவித்து வந்துள்ளார். பரிசோதனையில் இவருக்கு கடுமையான ‘மைட்ரல் ரெகுர்ஜிடேஷன்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது இதயத்தின் வால்வில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னையாகும். இதில் ரத்தம் இதயத்தில் பின்னோக்கிக் கசிந்து, பாதிப்பு அறிகுறிகளை மோசமாக்கி, இதய செயலிழப்புக்கான கடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற வழக்கமான சிகிச்சை முறைகளை இந்த நோயாளிக்கு மேற்கொள்வது அதிக ஆபத்து நிறைந்தவையாக இருந்தன. மேலும், அவரது முதிர்ந்த வயது மற்றும் அவருக்கு இருந்த பிற உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவை பரிசீலிக்கப்படவில்லை.
மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிப்பது மட்டும் அவரது பாதிப்பை குணப்படுத்த போதுமானதாக இல்லை. எனவே சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உள்நாட்டுத் தயாரிப்பான மைட்ரல் கிளிப் சாதனத்தை பயன்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு காவேரி மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து தலைமை இதயவியல் மருத்துவர் அஜித் பிள்ளை கூறியதாவது: கடுமையான மைட்ரல் ரெகுர்ஜிடேஷன் உள்ள நோயாளிகள், வயது, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பலவீனம் அல்லது சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற இணை நோய் பிரச்னைகள் காரணமாக, திறந்தநிலை அறுவை சிகிச்சையை செய்துகொள்ள இயலாத சிரமத்துடன், அதிக ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மைட்ரல் ரெகுர்ஜிடேஷன் பாதிப்பு, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிர் பிழைக்காமல் போகலாம். மேலும் ஓர் ஆண்டுக்குள் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் 57 சதவீதம் வரை இருக்கலாம். அத்தகைய நோயாளிகளுக்கு, இந்த அறுவை சிகிச்சை அற்ற மைட்ரல் கிளிப் மருத்துவ செயல்முறை, உயிர் காக்கும் ஒரு சிறந்த மாற்று வழிமுறையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
