Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல் நலத்தை மைனஸ் ஆக்கும் மயோனைஸ்: உணவு பிரியர்களுக்கு உயிர் பயத்தை காட்டும் சால்மோனெல்லா பாக்டீரியா; மாற்று வழி உள்ளதாக மருத்துவர்கள் கருத்து

* சிறப்பு செய்தி

உலகின் பரிணாம வளர்ச்சியில் நவநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்லும் மனிதர்கள் பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை மறந்து புதிது புதிதாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பண்டங்களுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். உணவே மருந்து என முன்னோர்கள் அரிசி, கீரை, பருப்பு வகைகள், தானியங்கள், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை சமைத்து சாப்பிட்ட காலம் போய், இப்போது அன்னிய நாட்டு உணவு ஆதிக்கத்தால் ஷவர்மா, மோமோஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற உணவு பண்டங்கள் மூலம் வயிறு நிரம்பினாலும், ஆயுள் சுருங்கும் உணவிற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

சமீபகாலமாக கெட்டுப்போன இறைச்சியை கொண்டு துரித உணவகங்களில் சமைப்பதும், அதனை உண்பவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதுமன்றி, சில நேரங்களில் மரணத்தை தழுவும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. அதேபோல், வீதிக்கு வீதி கடைகள் விரிக்கப்பட்டு, புதிது, புதிதாக உணவு பொருட்கள் தயாரித்து வியாபார உத்திக்காக மக்களை கவரும் வகையில் அதனை புரோமோசன் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் வைரல் செய்து தரக்கூடிய உணவு தரமானதா என்பதை கூட அறியாமல் பொதுமக்களின் உயிரில் ஊஞ்சல் கட்டி விளையாடுகின்றனர்.

அந்தவகையில், தந்தூரி, ஷவர்மா, பார்பிகியூ போன்ற உணவுகளுக்கு சைடிஸ்ஸாக இருக்கும் மயோனைஸ் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும் மெயின் டிஸ்சாக மாறி உள்ளது. ஆம், பச்சை முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் இந்த மயோனைஸ்சில் சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி (ஈ கோலி) மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, தமிழக அரசு சமீபத்தில் மையோனைஸ் உணவு பொருட்களுக்கு ஓராண்டுக்கு தடை விதித்தித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை உத்தரவில் ‘‘முட்டைகளால் செய்யப்பட்டும் மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்கள் மக்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருட்ளுக்கு அடுத்த ஓராண்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை விதிப்பு அதன் பின்னரும் தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூலப் பொருளான முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகி சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள மயோனைஸ் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவு பொருட்களாக தற்போது உள்ளது. இந்த மயோனைஸ் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பச்சை முட்டை இருக்கிறது. அதில், சால்மோனெல்லா என்று கூறப்படும் பாக்டீரியா உள்ளதால் அது டைபாய்டு போன்ற நோய்களை உருவாக்கும். அதேபோல், ஈ கோலி என்று அழைக்கப்படும் பாக்டீரியாவும் பச்சை முட்டையின் கருவில் நன்றாக வளருவதற்கான வாய்ப்பு உள்ளது. பொதுவாக ஆய்வு கூடங்களில் பாக்டீரியாக்களை வளர்ப்பதற்காகவே பச்சை முட்டையின் கருவை உபயோகப்படுத்துவர்.

இந்த பச்சை முட்டையின் கருவை சமைக்காமல் பயன்படுத்தினால் சால்மோனெல்லா, ஈ கோலி போன்ற பாக்டீரியாக்கள் அதிகளவில் வளர்ந்து விடும். இதனை சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை உருவாக்கும். தினமும் அல்லது அடிக்கடி மயோனைஸ் சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னையை உண்டாக்கும். இதுதவிர, அதிக எடை உண்டாதல், ரத்த அழுத்தம் போன்றவற்றால் மாரடைப்புக்கு அது வழிவகுக்கும். அரசு கடைகளில் தடை செய்தாலும், வீட்டில் செய்து கொடுக்கும் மயோனைஸ்சிலும் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு மயோனைஸின் ஆயுட்காலம் நான்கு நாட்களாகும். அதனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதும் தீமையை உண்டாக்கும். எனவே வீட்டில் முட்டை வைத்து செய்வதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

* மாற்று உணவு என்ன?

வீட்டில் குழந்தைகள் மயோனைஸ் சாப்பிட்டு பழக்கப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட மயோனைசிற்கு மாற்றாக ஹம்மஸ் என்று அழைக்கக்கூடிய சாஸ் செய்து தரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை கொண்டை கடலை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் செய்யலாம் என்றும், இதன் மூலம் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இது தவிர, சில உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மிராக்கிள் விப், கிரேக்க தயிர், அக்வா பாபா, புளிப்பு கிரீம், வெண்ணெய், தஹினி, அவகேடோ, டோபு மயோனஸுக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என கூறியுள்ளன.

* தடை விதித்த மாநிலங்கள்

கேரளாவில் மயோனைஸால் ஏற்படக்கூடிய உணவு விஷப்பாதிப்பு அபாயங்களை கருத்தில் கொண்டு கடந்த 2023ம் ஆண்டு தடை விதித்தது. அதேபோல், கடந்தாண்டு தெலங்கானாவில் மோமோஸுடன் மயோனைஸை சேர்ந்து சாப்பிட்ட பெண் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தமிழகத்திற்கு தற்போது ஓராண்டிற்கு மயோனைஸுக்கு தடை என்பது விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.