சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க் கடிக்கு, பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சான்றிதழ் வழங்கி, அங்குள்ள முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாய்க் கடிகளினால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. இதுதொடர்பாக தனி ஆய்வுக்கூட்டம் நடத்தி, முதல்வர், துணை முதல்வர் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அனைத்து அரசு செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசி நாய் இனப் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை உருவானதிலிருந்தே நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார அளவிலான மருத்துவமனைகளிலும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது.
தமிழ்நாட்டில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு ஏஆர்வி என்கின்ற மருந்தும், பாம்புக் கடிக்கு ஏஎஸ்வி என்கின்ற மருந்தும் இருப்பு வைக்கப்பட்டு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் நுழைவாயில்களிலும் பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துக்கான கையிருப்பு அளவு விளம்பரமும் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான சூழல் என்பது நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்குமான மருந்துகளில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை பலமுறை சொல்லி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.