Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாமக்கல் மாநகரில் 17 இடங்களில் சுகாதார பணிகள் துவக்கம்

*கமிஷனர் நேரில் ஆய்வு

நாமக்கல் : நாமக்கல் மாநகரில் அதிகம் கவனிக்கப்படாத 17 இடங்களில், தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி, தூய்மையே சேவை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாமக்கல் மாநகராட்சி பகுதியில் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தூய்மை சேவை நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியையொட்டி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தூய்மை விழிப்புணர்வுகள் மற்றும் தூய்மை நிகழ்வுகள், தூய்மை செயல்பாடுகள் மாநகராட்சி பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாநகரில் உள்ள பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாநகரில் உள்ள அதிகம் கவனிக்கப்படாத குப்பைகள், கழிவுகள் நிறைந்து கிடக்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்யும் பணி தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மாநகரில் உள்ள 17 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தூய்மை பணி நேற்று துவங்கியது. நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அசோக்நகர், காதிபோர்டு காலனி, பெரியப்பட்டி நரிக்குறவர் காலனி ஆகிய இடங்களில் நேற்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதில், மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் சாலையோரம் குப்பை கழிவுகளை வீசக்கூடாது என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து தூய்மை பணிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், ‘நாமக்கல் மாநகரில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும், இதுவரை சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெறாத பகுதிகள் என 17 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். சாலையோரம் குப்பைகளை வீசக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள அனைத்து பகுதிக்கும் தினமும் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். இருப்பினும் மாநகரில் சில இடங்களில் சாலைகளில் குப்பை கழிவுகளை பொதுமக்கள் வீசிவிட்டு செல்கின்றனர். அந்த பழக்கத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும்.

மாநகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார்.நாமக்கல் மாநகராட்சியில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தூய்மை விழிப்புணர்வு மற்றும் கழிவு மேலாண்மை குறித்து போட்டிகள் நடத்தப்படுகிறது.

அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், பொது இடங்கள், நீர் நிலைகளின் கரைப்பகுதிகளில் மற்றும் பொது கழிப்பிடங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியை நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.