*வத்தலக்குண்டு அருகே பரபரப்பு
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே பணிமாற்றம் செய்யப்பட்ட தலைமையாசிரியையை மீண்டும் பணியமர்த்தக் கோரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியையாக பணியாற்றிய விஜயா, வேறு ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் கவலையில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை உணவு உண்ணாமல் பள்ளி முன்பு அமர்ந்து பள்ளிக்கு பல நற்பெயர் வாங்கி கொடுத்த, பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் பெற்று கொடுத்த தலைமையாசிரியை விஜயாவை மீண்டும் பணியமர்த்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மற்ற ஆசிரியர்கள் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் ஆண்டவர், மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்பே மாணவ, மாணவிகள் கைவிட்டு உணவருந்தி விட்டு பள்ளிக்கு சென்றனர்.