Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தலைதூக்கும் போர்

இதோ டிரம்ப் தலையிட்டு விட்டார், போர் நின்றுவிட்டது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காசா போர் அவ்வளவு எளிதாக முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடக்கும் மோதல்கள் அதைத்தான் காட்டுகின்றன.

காசா- இஸ்ரேல் போர் காலங்காலமாக நடந்து வந்தாலும் உச்சகட்டமாக வெடித்தது 2023 அக்டோபர் 7ஆம் தேதி தான். அன்று இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் போராளிகள் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை கொன்று, 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். காசாவை தாக்குவதற்கு வழி தேடிக்கொண்டு இருந்த இஸ்ரேலுக்கு, ஹமாஸ் குழுவின் இந்த திடீர் தாக்குதல் நல்வாய்ப்பாக மாறிவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை போர் சத்தம் காசாவில் ஓயவில்லை. இப்போது வரை காசாவில் 68,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,70,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்த பல உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. 2023 நவம்பரில் ஒரு தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டு, பின்னர் முறிந்தது. 2025 ஜனவரியில் இரண்டாவது போர்நிறுத்தம் தொடங்கியது. மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் திடீர் தாக்குதலுடன் அது முடிந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவரது தலைமையின் கீழ் நடந்த பேச்சுவார்த்தையில் அக்டோபர் 10 அன்று மூன்றாவது போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது . ஆனால் அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி விட்டதாக கூறி மீண்டும், இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு நடத்தத் தொடங்கி விட்டது. எப்போது குண்டு சத்தம் ஓயும் என்று காத்திருந்த மக்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறிவிட்டது.

அக்.10ஆம் தேதி குண்டுச்சத்தம் ஓய்ந்ததும் தங்கள் வீடுகளை விட்டு ஓடிய மக்கள் காசா பகுதிக்கு திரும்பியபோது அவர்கள் பார்த்த காட்சிகள் கண்ணீரை வரவழைக்கும் நிலையில் இருந்தன. எங்கும் புழுதி மண்டலம். கட்டிடங்கள் இடிந்து, சரிந்து கிடந்தன. மறுசீரமைப்பு செய்யக்கூட முடியாத நிலை. அவ்வளவு அவலம். தாங்கள் இதுவரை வாழ்ந்த இடம் இப்படி ஒரு வெறும் கூடாக பார்த்ததும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். மண்ணில் புரண்டனர். ஆம் காசா இப்போது மனிதர்கள் வாழத்தகுதி இல்லாத இடமாக மாறிவிட்டது. இஸ்ரேல் அந்த பகுதியை அப்படி மாற்றி விட்டது.

சரி இனிமேல் அமைதி நீடிக்கும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. மீண்டும் போர் தலை தூக்கி விட்டது. ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தத்தில் தொடக்கம் முதலே இழுபறி நீடித்தது. ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸ் ஆயுதங்களை ‘வன்முறையாக’ பறிப்போம் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அதை எல்லாம் மீறி மீண்டும் போர் வெடித்ததால் அதிபர் டிரம்ப் தனது உயர்நிலைத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காப் ஆகியோரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்துள்ளார். ஹமாஸ் அமைப்பு மிகவும் நல்லவர்களாக, ஒழுக்கத்துடன், இனிமையாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் நாங்களே நேரடியாக சென்று அவர்களை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று இறுதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார் டிரம்ப். இது பெரும் அபாயம்.