Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மண்டலத்தில் ரூ.12 கோடி விற்பனை இலக்கு

*கலெக்டர் சுகுமார் தகவல்

நெல்லை : நெல்லை மண்டலத்தில் கோ- ஆப்டெக்ஸ் மூலம் ரூ.12 கோடிக்கு தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை கலெக்டர் சுகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நியூவின் கிரேஸ் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் சுகுமார் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாடு அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

தீபாவளி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், திருப்புவனம் பட்டுபுடவைகள், சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கிகள், துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை பொருநை விற்பனை நிலையம், கீழ ரத வீதி டவுன் செந்தில் விற்பனை நிலையம், வடக்கு ரத வீதி டவுன் பட்டு மாளிகை விற்பனை நிலையம், பாளையங்கோட்டை விற்பனை நிலையம் ஆகிய 5 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன.

கடந்த 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், நெல்லை மண்டலத்தில் 13 விற்பனை நிலையங்களிலும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “ கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

விழாவில் கோ ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், துணை மண்டல மேலாளர் பாண்டியம்மாள், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.