தேனி: செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அடுத்தகட்ட நகர்வு குறித்து கேட்டபோது, ‘‘எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களாகிய உங்களை அழைத்து முடிவை தெரிவித்துவிட்டு தான் பணிகளை செய்வேன்.
அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவளிப்போம். இது தொடர்பாக செங்கோட்டையன் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். 10 நாட்கள் முடிந்த பின்னால், அனைவரையும் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அவகாசம் முடிந்த பிறகு, செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்’’ என்றார்.
நயினார் சமரசத்துக்கு தயாரா?
‘‘ஓபிஎஸ் - டிடிவி.தினகரனுடன் சமரசம் பேசத் தயார் என பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘‘நயினார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துகள்’’ என்றார்.