மேட்ரிமோனி மூலம் வலைவிரித்து 50 பெண்களை ஏமாற்றி உல்லாசம்: காமக் கொடூர வாலிபர் சிக்கினார்: தப்பியோடியபோது கால் முறிந்தது
அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொடுத்த புகாரில் கூறியிருந்தாவது; தனக்கு மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து வந்தபோது ஒரு வாலிபர் எனக்கு போன் செய்து, ‘’மாப்பிள்ளை வேண்டுமென்று தெரிவித்து இருந்தீர்கள், உங்க படத்தை பார்த்தேன், நானே உங்களை திருமணம் செய்கிறேன், உங்களை நேரில் பார்க்க வேண்டும்’ என்றார். இதையடுத்து நான் நேரில் சென்று பார்த்தபோது திருமணம் ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு வாலிபர் தலைமறைவாகி விட்டார். எனவே, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். வாலிபரின் கார் நம்பரை வைத்து விசாரித்தபோது திருநெல்வேலி மாவட்டத்தில் அந்த வாலிபர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் துணை ஆணையர் உதயகுமார் உத்தரவின்படி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் திருநெல்வேலி மாவட்டத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து 15 நாட்கள் முகாமிட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யாவை (25) கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்துவந்தனர்.
அப்போது அமைந்தகரை கூவம் ஆற்றின் அருகே போலீசார் பிடியில் இருந்து தப்பியோடியபோது கீழே விழுந்து சூர்யாவின் இடது கால் முறிந்தது. இதனால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவிட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.