ஹசீனாவுக்கு மரண தண்டனை எதிரொலி; வங்கதேசத்தில் உள்நாட்டு போரை யூனுஸ் அரசு விரும்புகிறதா?: அவாமி லீக் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய இடைக்கால அரசு நாட்டை உள்நாட்டுப் போருக்குள் தள்ள முயற்சிப்பதாக அவாமி லீக் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கியது தொடர்பான வழக்கில், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று (நவ. 17) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வரவேற்ற இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ‘அதிகாரம் படைத்தவர் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல’ என குறிப்பிட்டார்.
ஆனால், இந்த தீர்ப்பை ‘அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என ஷேக் ஹசீனா நிராகரித்தார். மேலும், ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசை யூனுஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் யூனுஸ் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘தேர்தெடுக்கப்படாத, சட்டவிரோத ஆட்சியால் நடத்தப்பட்ட ‘கங்காரு’ நீதிமன்றத்தின் திட்டமிட்ட நாடகம். யூனுஸ் அரசு தனது நடவடிக்கைகள் மூலம் வங்கதேசத்தை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளுகிறது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் யூனுஸ் அரசுக்கு தொடர்பு இருக்கிறது. நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்கி அதன் மூலம் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள யூனுஸ் அரசு விரும்புகிறது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


