சண்டிகர்: ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஒய். பூரன் குமார், கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் 8 பக்க கடிதத்தில், மாநில டி.ஜி.பி. சத்ருஜீத் கபூர், முன்னாள் ரோதக் எஸ்.பி. நரேந்திர பிஜார்னியா உள்ளிட்ட 8 உயரதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ‘ஜாதி ரீதியான பாகுபாடு, மன உளைச்சல் மற்றும் அவமானப்படுத்துதல் போன்ற தொடர் துன்புறுத்தல்களே’ தனது கணவரின் தற்கொலைக்குக் காரணம் என பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் பி. குமார் குற்றம்சாட்டினார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட டி.ஜி.பி. கபூர் மற்றும் பிஜார்னியாவை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கிக் கைது செய்யும் வரை, பிரேத பரிசோதனை செய்யவோ, உடலைத் தகனம் செய்யவோ அனுமதிக்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஹரியானாவில் தற்கொலை செய்த ஏடிஜிபி பூரண்குமார் மீதான ஊழல் புகாரை விசாரித்து வந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். ரோடக் அருகே விவசாய நிலத்தின் நடுவே உள்ள கட்டடத்தில் உதவி எஸ்.ஐ. சந்தீப் குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பூரண்குமார் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் மேலும் ஒரு அதிகாரி தற்கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
லதோட் என்ற கிராமத்தில் இறந்து கிடந்து உதவி எஸ்.ஐ. உடலின் அருகிலேயே 3 பக்க கடிதம் ஒன்றும் சிக்கியது. சந்தீப் குமார் அருகே சிக்கிய கடிதத்தில் உண்மைக்காக வாழ்க்கையை தியாகம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதிய கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பூரண்குமார் ஊழல்வாதி என்று பேசி சந்தீப் குமார் வீடியோ வெளியீடு வெளியிட்டார். பூரண்குமார் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில் அவர் மீது குற்றம்சாட்டி உதவி எஸ்.ஐ. சந்தீப் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு உதவி எஸ்.ஐ. சந்தீப் குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.