அரியானாவில் அடுத்தடுத்து சம்பவம் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஏற்கனவே உயிரிழந்த ஐபிஎஸ் புரான்சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம்
சண்டிகர்: அரியானா காவல்துறை அதிகாரி புரான் குமார் ஊழல் செய்தவர் என்று புகார் கூறியதோடு, உண்மைக்காக உயிரைத்தியாகம் செய்வதாககூறி உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அடுத்தடுத்து காவல் அதிகாரிகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகரில் காவல்துறை உயரதிகாரியான புரான் குமார் ஐ.பி.எஸ் கடந்த 7ம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கு முன்னதாக எழுதிய 8 பக்க கடிதத்தில், 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சாதிய பாகுபாடு தொடர்பான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்தார். தற்கொலை செய்து கொண்டு 7 நாட்கள் ஆன நிலையிலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. புரான் குமார் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டிஜிபி சத்ருஜித் கபூர், எஸ்பி நரேந்திர பிஜர்னியா ஆகியோரை கைது செய்யப்படும் வரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் மறுத்துள்ளார்.
இது தொடர்ந்து அரியானா அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து ஆலோசானை நடத்தினார்கள். இந்நிலையில் புரான் குமாரின் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த ரோஹ்தாக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் விடுமுறையில் செல்ல அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் ஊடக ஆலோசக் ராஜீவ் ஜெட்டி டிஜிபி சத்ருஜித் கபூர் அரசினால் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஓபி சிங் அரியானா டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக அரியானா சைபர் பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் புரான் குமார் மீதான ஊழல் வழக்கை விசாரித்து வந்தவர். இவர் தனது தற்கொலை கடிதத்தில் உண்மைக்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரோஹ்தாக்கில் உள்ள ஒரு வயலில் தனது சேவை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் வீடியோ மற்றும் மூன்று பக்க தற்கொலை கடிதத்தை எழுதி இருக்கிறார். இதில், புரான் குமார் ஒரு ஊழல் காவலர். அவர் தனது ஊழல் அம்பலப்படுத்தப்பட்டுவிடும் என்று பயந்து தான் தற்கொலை செய்து கொண்டார். சாதி பாகுபாடு பிரச்னையை பயன்படுத்தி அமைப்பை திசை திருப்பி இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் தான் புரான் குமார் மாற்றப்பட்டார்.
மதுபான ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.2.5லட்சம் லஞ்சமாக வாங்கிய புரான் குமாரின் பாதுகாவலர் பிடிபட்டார். லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்தபிறகு ஐபிஎஸ் அதிகாரி அதற்கு சாதி சாயம் பூசுவதற்கு முயன்று தற்கொலை செய்து கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ பதிவில்,‘‘ரோஹ்தாக்கில் புரான்குமார் நியமிக்கப்பட்ட பின்னர், நேர்மையான காவல் அதிகாரிகளை ஊழல் அதிகாரிகளாக மாற்றத்தொடங்கினார்.
இந்த நபர்கள் கோப்புக்களை தடுத்தனர். மனுதாரர்களை அழைத்து பணம் கேட்டு அவர்களை மனரீதியாக சித்ரவதை செய்தனர். பெண் காவல் அதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு ஈடாக அவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டனர். ஊழல் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இது சாதிப்பிரச்னை அல்ல. உண்மை வெளிவர வேண்டும். அவர் ஊழல் செய்தவர். இந்த உண்மைக்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன்.
நேர்மையுடன் நிற்பதில் பெருமைப்படுகிறேன். நாட்டை கட்டியெழுப்புவதற்கு இது முக்கியமாகும்” என்று சந்தீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும் புரான் குமாரின் தற்கொலை கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ரோஹ்தாக் எஸ்பி நரேந்திர பிஜார்னியாவை அவர் பாராட்டியுள்ளார்.
* உடனடி நடவடிக்கை தேவை - ராகுல்
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தற்கொலை செய்து கொண்ட மூத்த காவல் அதிகாரியின் குடும்பத்தினரை சந்தித்துப்பேசினார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ‘‘பல ஆண்டுகளாக இந்த அதிகாரியின் மன உறுதியை குலைப்பதற்கு அவரது தொழில் வாழ்க்கையை அவரது நற்பெயரை சேதப்படுத்த திட்டமிட்டு பாகுபாடு நடந்துள்ளது.
தலித்துக்களுக்கு ஒரு தவறான செய்தி அனுப்பப்படுகின்றது. நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றாலும், புத்திசாலியாக அல்லது திறமையானவராக இருந்தாலும் நீங்கள் தலித்தாக இருந்தால் உங்களை அடக்கலாம். நசுக்கலாம், தூக்கி எறியலாம் என்ற தவறான செய்தி அனுப்பப்படுகின்றது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக பிரதமர், மாநில முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூத்த காவல் அதிகாரியின் இரண்டு மகள்களுக்கும் நீங்கள் அளித்த உறதிமொழியை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவர்களின் தந்தையின் இறுதிச் சடங்கு நடக்கட்டும். இந்த குடும்பத்தினர் மீதான அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள். தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.