அரியானா தீவிரவாத டாக்டர்களிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சோதனையில் விபரீதம் காஷ்மீர் ஸ்டேஷன் வெடித்து 9 போலீசார் பலி
ஸ்ரீநகர்: அரியானாவில் தீவிரவாத டாக்டர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் வைத்து சோதனை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியது. இதில், தடயவியல் குழுவினர் உட்பட 9 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் மிரட்டல் சுவரொட்டிகளை ஒட்டினர்.
இதுதொடர்பாக நவ்காம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரியானா மாநிலம் தவுஜ் பகுதியில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் முசம்மில் கனாயி மற்றும் லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதில் டாக்டர் முசம்மில் கனாயி, அரியானாவின் பரிதாபாத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கு வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகிய பொருட்களையும், ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 9ம் தேதி முசம்மில் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டதும் அன்று மாலை டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு வெடித்தது. அதில் 13 பேர் பலியாகினர். முசம்மிலுடன் அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் உமர் நபி, காரில் பயங்கர வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இந்த தீவிரவாத டாக்டர் குழுவுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதால் இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு என்ன மாதிரியான வெடிபொருட்கள் கொண்டு நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து தடயவியல் குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். நவ்காம் போலீசார் சிறு சிறு பைகளில் அடைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கடந்த 2 நாட்களாக தடயவியல் நிபுணர்கள் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.20 மணி அளவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன. இதில், 2 வருவாய் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஒருவர், 2 கான்ஸ்டபிள்கள், தடயவியல் குழுவைச் சேர்ந்த 2 கான்ஸ்டபிள்கள், 2 புகைப்படக் கலைஞர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும், காவல் துறையை சேர்ந்த 27 பேர், வருவாய்துறை அதிகாரிகள் 2 பேர், பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றான இந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* தீவிரவாத தாக்குதலா?
டெல்லி குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய வெடிபொருட்கள் நவ்காம் காவல் நிலையத்தில் வெடித்ததில் தீவிரவாதிகள் கைவரிசை இல்லை என காஷ்மீர் போலீஸ் டிஜிபி நளின் பாரத் மற்றும் உள்துறை அமைச்சக இணை செயலாளர் பிரசாந்த் லோகண்டே இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது ஒரு விபத்தே தவிர, தீவிரவாத தாக்குதல் கிடையாது என இருவரும் உறுதியாக கூறி உள்ளனர்.
* எச்சரிக்கை மணி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பின் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கான எச்சரிக்கை மணி இது. பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
நவ்காம் காவல் நிலைய வெடி விபத்தில் பலியான 9 பேரின் உடல்களுக்கு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.


